தாளகம்
(ARSENIC TRISULPHIDE)
தாளகம் இரும்புடன் கலந்து கிடைக்கிறது. சைனா மற்றும் சுமத்ரா ஆகிய நாடுகளில் கிடைப்பதைவிட இந்தியாவில் குறைவான அளவு தாளகம்தான் கிடைக்கிறது.
தாளகம் கனம் உடையது. நெருப்பிலிட்டால் நீல நிற புகை வரும்.
1. சிவந்த அரிதாரம் - சிவந்த கல் போல் இருப்பது.
2. மடல் அரிதாரம் - இரண்டு கரடு அல்லது கட்டி இருப்பது.
3. பொன் அரிதாரம் - பொன் நிறமாக இருப்பது.
4. திரட்டு அரிதாரம் - அடுக்கடுக்காக இருப்பது.
ஏறத்தாழ தாளகத்தின் எல்லா வகைகளும் ஒரே குணத்தை உடையது. பாசாணமும் கந்தகமும் கலந்திருக்கும் சதவீதத்தால் தாளகத்தில் இந்தனை வகைகள்.
சிவந்த அரிதாரம், மடல் அரிதாரம், இரண்டும் மனோசிலை என்றும் கூறுகின்றனர்.
கோழை அகற்றுதல், சுரம் அகற்றுதல், வாந்தி உண்டாக்குதல் முதலிய செய்கைகளை கொண்டது தாளகம்.
' தாளகத்தின் பேருரைக்கத் தாலுகவு ணோய்குட்ட
நீளக் குளிர்காய்ச்ச னீர்க்கபங்க - ணாளகங்கொள்
துட்டப் பறங்கிப்புண் சூழழுகண் மண்டைநோய்
கிட்டப் படுமோ கிளத்து. '
' மந்தாரத் தாலே வளருஞ் சுவாசநோ
யுந்திவரு தீச்சுரநோ யோடுங்காண் - முந்து
தொனிக்கயஞ்செய் யான்கடியுந் தோற்குட்டு மேகுந்
தனிப்பொன் னரிதாரத் தால். '
' காச முடனே கயநோய் கபவாதம்
பேசரிய குன்மமெட்டும் பேருங்காண் - மாசகன்ற
கீற்று மதிநுதலே கேளாயுள் வேதமது
சாற்று மரிதாரத் தால். '
' ஈளை யுடனே யிருமல் குடி விலகுங்
கோழை மலமகலுங் கொம்பனையாய் - நாளு
மடலுறுக யங்கரப்பா னாறாப்புண் ணும்போ
மடலரிதா ரத்தை மதி. '
' மடலரிதா ரத்தில் வருங்கரடி ரண்டு
முடல்விடங்க ளைக்களையு முண்மை - கடல்சூழும்
வையகத்தி லிச்சரக்கை வன்றீயில் வைத்தெடுக்க
ஐயமிலை யென்றே யறி. '
' சிவந்தவரி தாரமது செஞ்சிலைபோற் காட்டு
முவந்ததனை யுண்முறையோ டுண்டா - லிவர்ந்தாழ்
சுரங்குளிர்மா வாதமுடற் சூலைநமை குட்ட
மிரங்குமென நாளு மிசை. '
ஈழை, இருமல், கோழை, இளைப்பு, குட்டம், குளிர் சுரம், பறங்கிப்புண், உடல் குத்தல், நமைச்சல், கபால நோய்கள், நாக்கு நோய்கள் தீர்க்கும்.
ஆயுர்வேத வைத்திய நூல்களில் பத்திர தாளகம், பிண்ட தாளகம், என இரண்டாக சொல்லப்படுகிறது.
பத்திர தாளகம் காய்ச்சலை போக்கவும், உடலை தேற்றவும் பயன்படுகிறது.
பிண்ட தாளகம் வர்ண பொருளாகவும், தாள்களை உருவப்படுத்துவதற்கும், சிதல் பூச்சிகள் பாழ்படுத்தாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
பீதகி, ஆலம்பி, பிஞ்சனம், பழுப்பு, கோதந்தம், மாலம், அரிதாரம், கால்புத்தி, பொன் வர்ணி, மஞ்சள் வர்ணி, மால் தேவி, அரிதளம், போன்ற பெயர்களும் இதற்கு உண்டு.
இரசவாதத்தில் தாளகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிதாரத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் வங்கம் செம்பில் கலந்தால் நிறம் கொடுக்கும் என்றும் சொல்கின்றனர்.