நவச்சாரம்
(AMMONIUM CHLORIDE)
இலவணவாயு (உப்புக் காற்று), நீர் வாயு (ஜல வாயு) இரண்டையும் ஒன்றோடு ஒன்று பொருந்தச் செய்வது இயலாது, ஆனால் நேர்மாறாக பொருந்தச் செய்ய முடியும். அப்படிப்பட்ட கலவைதான் நவச்சாரக் காற்று (நவச்சார வாயு) ஆகும்.
இரும்பு துருப்பிடிப்பதிலும், ஈரமாய் இருக்கும் போதும், செந்தூரமாகும் போதும், சிறிதளவு நவச்சார வாயு உண்டாகிறது. இந்த வாயுவிற்கு நிறமில்லை அதிக நெடி இருக்கும்.
கடைகளில் கிடைக்கும் சரக்கு பார்வைக்கு கட்டியாகவும் வாசனை இல்லாமல், நார் நாராகவும், தூளாக்க கடினமாகவும் இருக்கும். அழுக்குப் படிந்த வெண்மை அல்லது கபில நிறமுள்ளதாகவும், கசப்பு, புளிப்பு, வெருட்டல் உள்ளதாகவும் இருக்கும்.
நம் நாட்டில் தயாரிக்கப்படுவதை நாட்டு நவச்சாரம் என்றும் கூறுவார்கள்.
" குன்மங் குடற்சூலை கொல்லு மகோதரத்தை
வன்மையுறு கல்லடைப்பை மாற்றுங்காண் ---சன்மக்
கவிச்சுமுத் தோடங் கனவாத நீக்கு
நவச்சார மாதே நவில்."
வயிற்றுவலி, குடலில் குத்தல், பெருவயிறு, கல்லடைப்பு, திரிதோசம் நீக்கும், உப்புசம், கல்லீரல் வீக்கம், மண்ணீரல் நோய், நீர்க்கோவை, இரத்த காசம், முறைக்காய்ச்சல், விடாக்காய்ச்சல் முதலியவைகளுக்கும் உபயோகப்படுத்தப் படுகிறது.
இஷ்டிகை, சல்லிகை, குளிகை, படு, நீர்க்கூர்மை, மேகநாதன், செயநீர்க்கர்த்தன், நீர்க்குரு, கங்கைக் குணி என்ற பல பெயர்கள் இதற்குண்டு.
நவச்சாரத்திற்கு வாசனை இல்லை, காரம், எரிச்சல், கசப்பு, சிறுநீர் வெருட்டல் முதலிய குணங்கள் உள்ளன. இது நீரிலும் சாராயத்திலும் எளிதில் கரையும்.
தகரம், இரும்பு, செம்பு போன்ற சில உலோகங்களைப் பற்றவைப்பதற்கும், ஈயப் பாத்திரத்தில் பற்ற வைப்பதற்கும், ஒளியைக் கொடுப்பதற்கும் கன்னார்கள் பயன்படுத்துகின்றனர். சாயம் போடுபவர்கள் வர்ணம் ஏற்றப் பயன்படுத்துகின்றனர்.
இரசவாதத்திற்கு பயன்படக்கூடிய செயநீருக்கு ஆதிப் பொருள் நவச்சாரம் ஆகும்.