செம்பு
(COPPER)
சுரங்கங்களில் கிடைக்கின்ற இந்த உலோகம் நாம் அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய உலோகம். இது தங்கம், வெள்ளி, வெண்வங்கம், காரீயம், நாகம், இரும்பு, நிமிளை, கெந்தி முதலிய பொருட்களுடன் கலந்து கிடைக்கிறது. இக்கலப்பிலிருந்து செம்பை தனியாகப் பிரித்தெடுக்கின்றனர்.
வட அமெரிக்காவிலும், நேபாளத்திலும் செம்புத் தாது அதிகமாக கிடைக்கிறது. இதில் நேபாளத்தில் கிடைப்பதுவே அன்றும் இன்றும் சிறந்த வகை என்று (அன்றும் - இன்றும்) சொல்லப்படுகிறது. 'இங்கிலீஸ் முறை, ஜெர்மன் முறை' என இரு முறைகளில் கலப்புத் தாதுவிலிருந்து செம்பு பிரிக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது.
இது வெடியுப்பு திராவகத்தில் மட்டுமே கரையும். இது கரையும் போது சிவந்த புகை உண்டாகும். கெந்தக திராவகத்தில் காய்ச்சும் போது 1090 டிகிரி வெப்பம் தேவைப்படும்.
இந்திரகோபம் (பட்டுப்பூச்சி), பூநாகப் பூச்சி (நாங்கூழ் பூச்சி), மயில் இறகு, தலை மயிர் மற்றும் சில மூலிகைகளிலிருந்தும் செம்புச் சத்து எடுக்கப்படுகிறது.
சுத்தமாக தூய்மை செய்யப்பட்ட செம்பானது வெள்ளி, தங்கம் முதலியவைகளுடன் மிதமான அளவோடு முறையாக சேர்க்கப்பட்டால் அதற்குரிய குணத்தைப் பெறுகிறது.
தாமிரம், அவுதும்பம், உதும்பம், இரவி, ராசி, இரவிப்பிரியம், எருவை, சீருணம், சீருணி கற்பம், சுலபம், தாம்பிரம், பரிதி, விடம் என்ற பெயர்களும் செம்புக்கு உண்டு.
வெப்ப வீரியமுள்ள இது கார்ப்புச் சுவையுடன் இருக்கும். இது வெப்ப உடலினர்க்கு ஆகாது. வாந்தி உண்டாக்குவது இதன் தீய குணமாகும்.
" தாம்பரத்தாரற் சோரிபித்தஞ் சந்நி வழுவைகபம்
வீம்பார்பி லீகமந்தம் வெண்மேகந் --- தேம்பழலை
சூதகநோய் புண்கிரந்திதோடசுவா சங்கிருமி
தாதுநட்டங் கண்ணோய்போஞ் சாற்று. "
குட்டம், பெருநோய், பித்தவிகற்பம், கபவிகற்பம், செந்நீர்ப்பித்தம், பெருவயிறு, குன்மம், புண்கள், தாது இழப்பு, இருமல், ஈளை, இளைப்பு, கண்நோய் முதலியவைகளைப் போக்கும்.
அயம், சூதம், தங்கம், நாகம் முதலியன நட்புச் சரக்குககள்.
காரீயமும், வெடியுப்பும் பகைச் சரக்குகள்.
இந்த உலோகத்தில் வெளுப்பாக அல்லது கருப்பாக உள்ளதும், அடித்தால் விரிந்து கொடுப்பதும், கழுவக் கழுவக் கருத்துக் காணப்படுவதும் மருத்துவத்திற்கோ வேதியியலுக்கோ பயன்படாது.