அயம்
(Ferrum)
இரும்பு மலைகளிலும், நிலங்களிலும், அநேகமாக கெந்தகம் போன்ற சில பொருட்களுடன் கிடைக்கிறது. இத்தாது தாவர, உயிர்ப் பொருட்களில் சிறிதளவு கலந்தும் இருக்கிறது.
" பாண்டுவெண் குட்டம் பருந்தூல நோய்சோபை
மாண்டிடச்செய் மந்தங்கா மாலைகுன்மம்--பூண்ட
பெருந்தாது நட்டமும்போம் பேதிபசி யுண்டாங்
கருந்தாது நட்டமிடுங் கால்."
இளைத்தவர் இரும்பை உண்ண வேண்டும் என்பது பழமொழிகளில் ஒன்று. இரும்பு இரத்தத்தின் தன்மையை மேனிலைப் படுத்தும், இரும்பு கலந்த மருந்துகள் மலக் கட்டை உண்டாக்கும். பித்த பாண்டு, வெண்குட்டம், அதிதூலநோய், சோகை மந்தம், காமாலை, குன்மம், சுக்கில நட்டம், கழிச்சல் முதலியன நீங்கும் பசி உண்டாக்கும்.
அகி, அயசு, அயில், இடி, இரும்பு, ஈயசெயம், கரும் கொல், கருப்பி, கரும்பி, கருப்பு, கருமணல், கரும் பொன், கயசு, கிருஷ்ண வையம், காலில் நெகிளம், ஆதி, சத்து, சிரோசரம், சிட்டம், திரும்பி, துண்டம், பிண்டம், பொன்மணல், லோகம், வாழ்பூமி நாதம், கருந்தாது என்கிற வேறு பெயர்களிலும் இது வழங்கப்படுகிறது.
சத்துரு
அண்டவோடு, அப்பிரகம், கெந்தி, கிளிஞ்சலோடு, கௌரி, சவ்வீரம், சாரம், சிங்கி, சிலாசத்து, சிலை, தரா, நிமிளை, பூநீறு, வங்கம், வெண்காரம், வெண்கலம், வெள்ளைப் பாஷாணம், ஆகியவைகள் பகைச் சரக்குகள் ஆகும்.
மித்திரு
காந்தம், இராஜ வர்த்தம், கெந்திச் செம்பு, செம்பு, தங்கம், நாகம், பூநாகம், பூரம், மயூரச் செம்பு, வெள்ளி ஆகியவைகள் நட்புச் சரக்குகள் ஆகும்.