இலிங்கம்
(CHINNABARIS FACTITIA CHINENSIS)
இரசமும் கெந்தியும் கட்டி உண்டாயிற்று என்று இதன் பிறப்பு வரலாறு சொல்லப்படுகிறது.
இயற்கையாக விளைச்சல் உள்ள இலிங்கம் இப்போது புழக்கத்தில் இல்லை. வைப்புச் சரக்கான ஜாதிலிங்க பாஷாணம்தான் இப்போது கையாளப்படுகிறது.
சிவந்த நிறத்தில் உள்ள சாதிலிங்கத்திற்கு நெருப்பிலிட்டால் புகையும் தன்மையும் நீரில் கரையாத கனத் தன்மையும் உண்டு. வாசனையும் சுவையும் கிடையாது. நெருப்பின் நிறமும் வெப்ப வீரியமும் கொண்டது.
" பேதிசுரஞ் சந்தி பெருவிரண நீரொடுத
காதகடி காசங் கரப்பான்புண்--ணோத
வுருவிலங்க சங்கதமா யூறுகட்டி யும்போங்
குருவிலிங்க சங்கமதைக் கொள். "
" ஆதி யிரதவுருக் காதலாற் சாதிலிங்க
மோதி விரதகுண முற்றுடலிற்---றீதுபுரி
குட்டங் கிரந்தி கொடுஞ்சூலை வாதமுத
லுட்டங்கு நோய்களை யோட்டும்."
பேதி, சுரம், சன்னிபாதம், தீராப்புண்கள், அதிமூத்திரம், கரப்பான், சிரங்கு, பரவு நுணாக்கல் கிரந்தி, குட்டம், கிரந்தி சூலை, வாத நோய், காசம் முதலியவைகளைப் போக்கும். உடலில் மறைந்திருக்கும் உட்பிணிகளையும் போக்குவது இதன் தனிச்சிறப்பு.
ஆண்குறி, இங்குலிங்கம்,ராசம்,கடைவன்னி,கர்ப்பம், கலிக்கம், காஞ்சனம், காரணம், சண்டகம், சமரசம், சானியம், செந்தூரம், மணிராகம், மிலேச்சம், வனி, வன்னி என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படும்.