கறியுப்பு (SODIUM CHLORIDUM)
காய்கறிகளுடன் சேர்த்து உபயோகிப்பதால் கறியுப்பு எனப்படும். உணவில் சேர்ப்பதால் சோற்றுப்பு எனப்படும்.
இந்த உப்பு பெரும்பாலும் கடல் நீரிலிருந்து எடுக்கப்படுகிறது. கடலுக்கு அருகிலுள்ள உப்பளங்களில் பாத்திகள் கட்டி, கடல் நீரை அவற்றில் பாய்ச்சுவார்கள். அந்த நீரானது சூரிய வெப்பத்தால் ஆவியாகிப் போனவுடன் அதில் கரைந்திருந்த உப்பு தனியாகத் தங்கிவிடுகிறது.
கறி உப்பு தனது எடையில் மூன்றில் ஒரு பங்கு குறைவான எடையுள்ள தண்ணீரில் கரைந்து போகும். நெருப்பில் வைத்து எரித்தால் படபடவென வெடிக்கும். பழுக்கக் காய்ச்சினால் உருகி ஓடிப் போகும். பொதுவாக உப்பைக் கரைத்து தெளிவை இறுத்திக் காய்ச்சிக் கொள்வதால் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.
" மந்தம் பொருமலறும் வாயுவும்போந் தீபனமாந்
தொந்தித்த வையந் தொடருமோ --- சந்ததமு
மக்கினியின் புட்டியடருங் கறியுப்பாற்
சிக்குகின்ற நீரிறங்குஞ் செப்பு."
கறியுப்பினால் அஜீரணம், வயிற்றுப்பிசம், வாத கபம், நீரடைப்பு இவைகள் போம். பசியும் சமாக்கினியும் விருத்தியாகும், கிருமி நாசினி, மலகாரி, வமனகாரி.
இந்த உப்பில் சவுட்டுப்புச் சத்தும், காற்று வடிவமான ஒருவகைப் பொருளும் உண்டு. ஆகையால் காரசாரப் பொருட்கள் தயாரிக்கவும், பக்குவப்படுத்தவும் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது,