கந்தகம்
(SULPHUR)
இயற்கையாக உருவாகும் பொருள்களில் முதன்மையானது கெந்தகம். இது தாவரப் பொருட்களிலிருந்தும் இணைந்தும் கிடைக்கிறது.
முட்டையின் வெள்ளைக்கரு, வெள்ளைப் பூண்டு, வெங்காயம் முதலிய பொருட்களில் இணைந்திருக்கிறது. இரும்பு, செம்பு, ஈயம், இரசம் முதலிய உலோகங்களோடு கலந்து தாதுவாக கிடைப்பதைப் பிரித்தும் கெந்தகத்தை எடுக்கின்றனர்.
கடையில் விற்கப்படும் கெந்தகத்தில் அயம், நாகம், பாஷாணம், சுண்ணாம்பு முதலிய குற்றங்கள் உள்ளன. எனவே உருக்கியாவது அல்லது வாலையிலிட்டு இறக்கியாவது பதப்படுத்தி உபயோகிக்க வேண்டும்.
கோழித்தலை கெந்தகம், அமரசிலைக் கெந்தகம், காட்டுக் கெந்தகம், நெல்லிக்காய் கெந்தகம், வாணக் கெந்தகம் (குழாய் கெந்தகம்) எனப் பல வகை உண்டு. சிவப்புக் கெந்தகம், பசுமை நிறமான (பீத) கெந்தகம், வெள்ளைக் கெந்தகம், ஊதா கெந்தகம் என நான்கு வண்ண வகைகள் உண்டு.
சிவப்புக் கெந்தகம் இரவு நேரத்திலும் விளக்கு போல் ஒளியுள்ள வெளிச்சம் தரக்கூடியதாக இருக்கும். தங்கச் சுரங்கங்களில் மட்டும்தான் இது கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலானோர் இதை கண்டதே இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
கிடைக்கின்ற மஞ்சள் நிற கெந்தகத்தைக் கொண்டுதான் சிவப்பு, வெள்ளை, கறுப்பு என்கின்ற மூன்று வகைக் கெந்தகங்களும் செயற்கையாக செய்யப்படுவதாகவும் கூறுகின்றனர்.
காரிழையின் நாதம், பறைவீரியம், அதீதப் பிரகாசம், பீஜம், செல்வி விந்து, சக்தி, சக்தி பீஜம், செந்தூரத்தாதி, தனம், தேவியுரம், நாதம் நாற்றம், பறை நாதம், பொன் வர்ணி, இரச சுரோணிதம் என்ற பெயர்களாலும் இதை அழைக்கப்படுவதுண்டு.
துவர்ப்பு, கைப்புச் சுவையுள்ள இது பித்த நீரை அதிகப்படுத்துதல், மல மிளக்கல், உடல் தேற்றல், வியர்வை உண்டாக்குதல் முதலிய செய்கைகளைக் கொண்டது.
" கட்டிச் சொறிசிரங்கு காணும் கிரந்திவகை
குட்டங் குறைநோய் குழிரணமும் -- வட்டமிட்டே
வந்த புரைபுண்கள் வாய்கதறி யோட்டமிடும்
கெந்தகத்தின் பண் பிதுவேகேள்."
கட்டி, சொறி, சிரங்கு, கிரந்தி, குட்டம், குழிவிழும் ரணங்கள், வட்டமிட்டு வருகின்ற செம்படை, கரும்படை ஆகியவை தீரும் எனப்படுகிறது.
தாய் தன் குழந்தையை வளர்பது போல நோய்களின் வெப்பத்தை மாற்றி உடலைத் தேற்றுவிக்கிறது. பதினெட்டு வகைக்குட்டம், கல்லீரல் வீக்கம், பெருவயிறு, கண்நோய்கள், நாட்பட்ட மேக நோய்கள், நச்சுகடிகள், வாதசுரம், சுவாச காசம், இருமல், மாரடைப்பு, பேதி, நாட்பட்ட கழிச்சல் முதலிய நோய்களுக்குக் கொடுக்கலாம். மருந்தின் அளவு கூடினால் பேதியாகும்.
இது எளிதில் நெருப்பு பற்றக்கூடியது, 300 டிகிரி வெப்பத்தில் எரியும், இதன் சுடர் மங்கலான நீல நிறமாக இருக்கும். இது அதிக வெப்பத்தால் எரித்தால் ஊதா நிறமாக எரியும். 180 டிகிரியில் எரித்தால் ஆவியாக எழும்பத் தொடங்கும். 216 டிகிரியில் இளகும். 226 டிகிரிக்கு மேல் 280 டிகிரி வரை எரிக்கப்பட்டால் முழுவதும் தண்ணீர் வடிவாகி, இலேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.
இதன் கொதி நிலையாகிய 450 டிகிரியில் இருந்து 600 டிகிரி வரை எரித்தால் இலேசான நீரின் வடிவத்தை அடைந்துவிடும். இந்தநேரத்தில் காற்றை வெளிப்படுத்தினால் எவ்வித மாறுதலும் இல்லாமல் கமலாப்பூ நிறமான பக்குவத்தை அடைந்துவிடும்.
இரசவாதத்திற்கு முக்கியமான இரண்டு பொருட்கள் கெந்தகமும், பாதரசமும் ஆகும்.
வெள்ளியை ஒரே தடவையில் தொடக்கத்திலேயே சிவப்பாக்கி விடும் மருந்தை கண்டுபிடிப்பது கடினம் என்றாலும் முதலில் கறுப்பாக்கி பிறகு சிவப்பாகும் பொருளாவது தேவையல்லவா? இதில் சிறப்பானது கெந்தகமாகும்.
கெந்தகத்தை அரைத்து வெள்ளியில் பூசி புடமிட்டாலும். அல்லது வெள்ளியை உருக்கி கவளம் கொடுத்தாலும் அதைக் கறுப்பாக்கிவிடும். பிறகு அதை ஓட்டில் வைத்து ஊதி எடுத்தால் மஞ்சள் நிறமுண்டாகும்.
இந்த கெந்தகத்தில் ஒரு பெரிய குறைபாடு அல்லது இழி குணம் இருக்கிறது. எந்தப் பொருளில் இது சேர்க்கப்படுகிறதோ அல்லது கொடுக்கப்படுகிறதோ அந்தப் பொருளை வெட்டையாக்கி விடுகின்றது. வெள்ளியை உருக்கி கெந்தகத்தை சேர்த்தால், வெள்ளியில் அதிக வறட்சியை உண்டாக்கி அதை வெட்டையாக்கி விடுகிறது.
ஆகவே இதன் கெட்ட குணத்தை போக்குவதற்கு பக்குவம் செய்யும்போது இதன் நல்ல குணங்களும் நீங்கி விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பக்குவ முறைகளைத் தான் கட்டு, செந்தூரம், பற்பம் முதலிய பல முறைகளாக இரசவாத மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.