காந்தம்
(LOAD STONE)
மஞ்சள், கறுப்பு, கலப்பு நிறம் ஆகிய நிறங்களில் காந்தம் கிடைக்கிறது.
கறுப்பு நிறமுள்ளதும், சிவப்பு நிறமுள்ளதும் வேதியியலுக்கு பயன்படுகிறது. கலப்பு நிறமுள்ளதை மருத்துவத்திற்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இரும்பை சுழற்றுவதால் பிராமகம் என்றும், இரும்புடன் ஒட்டிக் கொள்வதால் கம்பகம் என்றும், தன்னிடம் இழுக்கும் தன்மை இருப்பதால் கர்ஷகம் என்றும், உருக்கி வடிப்பதால் திராவகம் என்றும், ஒடித்தால் மயிர் போல் தெரிவதால் ரோமகம் என்றும் இதற்குப் பெயர்கள் சொல்லப்படுகின்றன. கற்காந்தம், ஊசிக் காந்தம், பச்சைக் காந்தம், அரக்குக் காந்தம், மயிர்க் காந்தம் என்றும் இவைகளை பல பிரிவாக கூறப்படுகிறது.
கர்ஷகமும், திராவகமும் வேதியியலுக்கும், பிராமகம், கம்பகம் மருத்துவத்திற்கும் பயன்படுகின்றன.
மழை, வெயில், காற்றுப் படும் இடங்களில் உள்ள காந்தம் பயன்படக் கூடியதல்ல. எனவே இரண்டு முழம் ஆழத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் காந்தமே உபயோகிக்கத்தக்கதாம்.
காந்தத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் தண்ணீர் விட்டால் எண்ணைத் துளி பரவாது. பட்டாணிக் கடலை கறுத்து போகும். பெருங்காயத்தின் வாசனை மறைந்துவிடும். பால் எவ்வளவு பொங்கினாலும் வழியாது. கடுக்காயின் கசப்பு நீங்கி விடும். வெந்நீர் சீக்கிரமாக ஆறிக் குளிர்ந்து விடும்.
இரும்புக்கு உள்ள குணமே இதற்கும் உள்ளது பொதுவாகச் சொல்லப்பட்டாலும், காந்தத்தில் உள்ள சிறப்புத் தன்மையால் அயத்தைவிடத் தகுதிமிக்கது எனக் கொள்ளலாம்.
" காந்தத்தாற் சோபைகுன்மங் காமிலமே கம்பாண்டு
சேந்ததிரி தோடவேட்டை சீதங்கா -- லோய்ந்தபசி
பேருதரங் கண்ணோய் பிரமியநீ ராமையும்போம்
மோரினிறை யாயுளுறு முன். "
வீக்கம், குன்மம், காமாலை, மேகம், பாண்டு, பெருவயிறு, கண்நோய், நீரிழிவு முதலியன நீக்குமாம்.
அக்குபஞ்சர்' என்ற ஊசி குத்தும் முறையானது நவீனப்படுத்தப்பட்டு இப்போது கையாளப்படுகிறது. அதேபோல் 'காந்த சிகிச்சை' என்ற ஓர் சிகிச்சை முறை சீனம், பர்மா முதலிய ஆசிய நாடுகளில் வெகுவாகப் பரவியுள்ளது.
வலி, வீக்கம் உள்ள உறுப்புகளில் காந்தக் கற்கள் குறிப்பிட்ட நேரம் வரை பட்டு வந்தால் குறைகின்றன எனப்படுகிறது. எந்தவகை மருந்தாக இருந்தாலும் காந்தத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தில் குறிப்பிட்ட நேரம்வரை வைத்திருந்து உபயோகித்தால் அந்த மருந்து விரைவாக குணமளிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
சிவலோகச் சேவகன், தரணிக்கு நாதம், சூத அங்குசம், நவலோகத் துரட்டி, காயசித்திக்கு பாத்திரவான், முருகன் புராணம் என்ற பெயர்களும் காந்தத்திற்கு உண்டாம்.