வெள்ளீயம்
(TIN STANNUM)
இது ஈய வகையைச் சேர்ந்தது. கருப்பாக இருப்பது காரீயம் எனவும் வெள்ளையாக இருப்பது வெள்ளீயம் எனப்படுகிறது.
வெண்மையான நிறம், கனம், நயப்பு, நெய்ப்பு, குளிர்ச்சி, விரைவில் உருகுதல், ஓசையில்லாமை முதலிய குணங்கள் கொண்டது மிகச்சிறந்தது.
வெளுப்பும் கறுப்பும் கலந்த நிறமுள்ளது, தரத்தில் குறைந்தது, மருத்துவ முறைக்கு உதவாது.
மிகச்சிறந்ததை குரகம் என்றும், பயனில்லாததை மிஸ்ரம் (கலப்புள்ளது) என்றும் ஆயுர்வேத முறைகளில் கூறப்படுகிறது.
" தாகங் கரப்பான் சலமேகம் பித்தகப
மேக மொளிமங்கல் வெப்பபல--மாகிரந்தி
துள்ளியமந் தார சுவாசமுமந் தாக்கினியு
வெள்ளீயம் போக்கும் விதி."
நாவரட்ச்சி, கரப்பான், நீர்ப்பிரமேகம், பித்தகபத் தொந்தம், மேகம், உடல் பளபளப்புக் குறைதல், சுவாச காசம், அக்கினி மந்தம் முதலிய நோய்களைப் போக்கும். குறிப்பாக பிறப்பு உறுப்பு நோய்கள், சிறுநீரகக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலை நாட்டினர் கட்டிகளைப் கரைக்கப் பயன்படுத்துகின்றனர்.
கைப்புச்சுவையும், வெப்ப வீரியமும் உள்ள இது வீக்கத்தைக் குறைத்தல், கிரிமிகளைக் கொல்லுதல், உயிர்த்தாது வெப்பத்தைத் தணித்தல் ஆகிய செயல்களைக் கொண்டது.
வெண்வங்கம், வெண்நாகம், குடியம், தவள வங்கம், பாண்டி, மாரசம் என்ற பெயர்களும் இதற்குண்டு.
அப்பிரகம், அண்டம், அயம், கல்லுப்பு, கெந்தி, காந்தம், கிளிஞ்சல், கௌரி, நத்தை, நிமிளை, வெடியுப்பு, கல்நார் முதலியன பகைச் சரக்குகள்.
சூதம், நாகச்செம்பு, பூநாகம், மயூரச் செம்பு, வெள்ளி, காரீயம் முதலியன நட்புச் சரக்குகள் ஆகும்.