துரிசு
(CUPRIC SULPHATE)
மயில்துத்தம், கண்டர், நற்பச்சை என்ற பெயர்களும் இதற்குண்டு. இது இயற்கையாகவும் உண்டாகிறது.
செம்புடன் கெந்தகத் திராவகம் கலந்து காய்ச்சி எடுத்து உப்பாக்கியும் கடைகளில் விற்கப்படுகிறதாம். இது நீல நிறமாக இருக்கும். தண்ணீரில் கரையும். இதற்கு ஒருவிதத் துவர்ப்பும், வெருட்டலும் உண்டு.
துரிசை நெருப்பிலிட்டால், துரிசிலுள்ள நீர் நீங்கி பச்சையும் வெள்ளையும் கலந்த சாயலாக இருக்கும். நெருப்பு அதிகமானால், அதிலுள்ள திராவகம் நீங்கிச் செம்பு வண்ணமுள்ள தூளாகும்.
" புண்ணாற்றுங் காமியத்தின் புண்ணாற்றுங் கண்ணோயை
விண்ணேற்று முத்தோட வீறடக்குஞ்---சண்ணுகின்ற
வாந்தியொடு பேதிதரும் வாய்நோய் சுரந்தணிக்கும்
காந்தி தருந்துரிசு காண்."
ரணம், கண்நோய், திரிதோசம், காய்ச்சல், வாய்ப்புண் முதலியன போக்கும் வாந்தி பேதி உண்டாக்கும்.
சவிட்டுப்பு, தொட்டிப் பாஷாணம், அஞ்சனக்கல், வெடியுப்பு, சூடன், அப்பிரகம், சீனம், வெள்ளைப் பாஷாணம், கல்லுப்பு, மிருதார் சிங்கி, காந்தம், இந்துப்பு, நாகம், வங்கம், சவுக்காரம் முதலியன பகைச் சரக்குகளாகும்.
அரிதாரம், நவச்சாரம், வெண்காரம், வீரம், கெந்தி, சூதம், பூரம், சிலை, கௌரி, நிமிளை, இலிங்கம் முதலியன நட்புச் சரக்குகளாகும்.