பாதரசம்
HYDRARGYRUM - (MERCURY)
மலைகளில் உள்ள இயற்கை சூழ்நிலையால் மோதல்கள் உண்டாகும். அப்போது நிலத்தில் பல மைல்கள் ஆழத்தில் உள்ள தீக்குழம்பு கொதித்துக் குமுறி எரிமலையாக வெளிவரத் தொடங்குகிறது அப்போது பூகம்ம் உண்டாகிறது பூகம்பம் உண்டாகி எரிலைத் தீ வெளிவந்தவுடன் நிலத்தின் குமுறல் அடங்குகிறது எரிமலையில் வெடித்துச் சிதறிய குழம்புகள் கொதிக்கும் நீராக நிலத்தில் வந்து தேங்குகின்றது, அதன் நடுவிலிருக்கும் பகுதிகள் ஆவியாக மாறி குளிர்ந்தவுடன் சில வகைப் பொருட்கள் கிடைக்கின்றன. அப்படிக் கிடைப்பதுதான் பாதரசம்! இது பாதரசமாகவோ லிங்கமாகவோ ககிடைப்பதாக கூறுகின்றனர்.
ஸ்பெயின், கலிபோர்னியா, இத்தாலி, ரஷ்யா, சைனா, ஜப்பான், முதலிய நாடுகளில் இது கிடைக்கிறது. இந்தியாவில் லிங்கத்தில் இருந்து வாலை ரசமாகப் பிரித்து எடுக்கப்படுகிறதாம்.
பொதுவாக செந்நிறமுடையது ரசம், கருமை நிறமுடையது இரசேந்திரன் மஞ்சள் நிறமானது சூதம். பல நிறமுள்ளது மிச்ரம் வெள்ளையானது பாதரசம் என ஐந்து வகையாகச் சொல்லப்படும்.
இது அறுசுவைகளையும் கொண்டது. குறிப்பாக இனிப்புச் சுவை உடையது. இது எந்தப் பொருளின் துணையும் இல்லாமல் தனித்தே செயல்படக் கூடியது.
வெப்பம், சீதம் ஆகிய இரண்டு வீரியங்களையும் உடைய இதை எந்த துணை மருந்தோடு சேர்த்துக் கொடுக்கிறோமோ அதன் தன்மையை பெறுகிறது.
ரசத்தை ஏதாவது ஒன்றுடன் சேர்த்து அரைக்கும் பொழுது நீர்போல் கலப்பதை 'ஜலகதி' என்பர். அழுக்காக பிரிந்து நிற்பதை 'மலமதி' என்பர். எத்தனை தடவை அரைத்தாலும் கலவைப் பொருளை விட்டுப் பிரிந்து நிற்கும் நிலையை 'ஹம்சக்தி' என்பர். எரிக்கும் பொழுது ஆவியாகும் நிலை 'தூமகதி' என்று சொல்லப்படுகிறது.
காரம், சூதம், புண்ணியம், கற்பம், சாமம், சத்துக்குரிய விரோதி, சாதி, சூத்திரன், துள்ளி, ஈசன், வீரியம், சூழ்ச்சி, நீர், விண்ணி நீர், வீண் மருந்து ரதம், சுக்கிலம், போகம், ஞானம், சுயம்புரு, வண்டு, நாகம், இலக்கியம், விஜயம், வேகம், மூலம், சிந்தூரம், சிந்து, பக்கிரம், பதிணெண்பத்தி, பாரதம், கனல், பூதம், இனிமை, சிவசக்தி, வருணத்தோன், தனிமை, சங்கரன் விந்து, பனிமை, பராபரம், பாய்ந்திடு தூமம், கனிமை, சரக்கிற் கலந்திடு சீவன், சிவன் விந்து, காவன், சிதறிக் காண்போன், கேசரி, வேந்தன், பாவன், அந்தர கந்தன், ஆதி, வராட்டியன், சுந்தரம், சொற்குறி, தூமம், மதாமரம், மந்தரம், மஞ்சி, மாருதம், மகிபன், விந்தரமசிலை, கணவன், மலைக்குறவன், வாசுகி நாதன், கந்தன், காவக்குடியோன். சிவம், விந்து, வஞ்சகம், மனவேகி, கமலினி, மகாதேவபலம், அரவீரியம், ரௌத்ரகாரம், கந்தம், சாறு என்கின்ற அநேக பெயர்களால் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதிலிருந்தே இதன் பெருமையை உணரலாம்.
தாது, தாவர, உயிர்ப்பொருட்கள் அனைத்திலும் உள்ள குணங்களை விட ஒப்புவமை இல்லாத தனிச்சிறப்பு பாதரசத்திற்கு உண்டு. இயற்கை அளித்துள்ள அற்புத சரக்கு இது.
பாதரசத்தை வேதியியல்படி எவன் ஒருவன் பக்குவப்படுத்தக் கற்றுக் கொண்டு விடுகின்றானோ அவனால் எல்லா உலோகங்களையும் செயற்கையாக உருவாக்க முடியும்.
இரசவாதத்தில் பாதரசமும் கெந்தகமுமே தலையாய இடத்தை வகிக்கின்றன.
வேறு சில பொருட்கள் சில நோய்களுக்கு சிறப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் வேறு சில நோய்களுக்கு கொடுக்கக் கூடாதென மறுக்கப்பட்டுள்ளன. சீதளத்தில் உண்டாகும் நோய்களுக்கு பயன்படும் மருந்துகள் வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு பயன்படாது.
உள் மருந்தாகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் வெளி மருந்தாகப் பயன்படுத்த இயலாது, ஒன்றிற்கு நன்மை தருவது மற்றொன்றிற்கு தீமை தரும். ஆனால் இரசமோ அப்படிப்பட்டதல்ல, சீதளம், வெப்பம் மட்டுமின்றி, உள், வெளி மருத்துவ முறைக்கும் பயன்படும். இது எந்த வீரியங்களில் உள்ள பொருளோடு சேருகிறதோ அந்தப் பொருளின் வீரிய்த்துடன் சேர்ந்து வலிமை உண்டாக்கும் எதிரிடையான வீரியத்துடன் உள்ள பொருட்களுடன் சேரும்பொழுது தனது தனித்தன்மையையும் விட்டுவிட்டு அந்தப் பொருளின் தன்மைக்கு ஏற்றபடி மாறிவிடும்.
"வழிநோய் கிரந்திகுன்ம மெய்ச்சூலை புண்குட்
டழிகாலில் விந்துவினா லத்தை - வழியாப்
புரியும்விதி யாதும் புரியுனோ யெல்லா
மிரியும்விதி யாது மிலை."
கண் நோய், கிரந்தி, எண் வகைக் குன்மம், சூலை, தொழுநோய் முதலியன போக்கும்.
அப்பிரகம், காரீயம், சிலை, கெந்தி, வீரம், தாளகம், தொட்டி பாஷாணம், வெள்ளி, செம்பு, துருசு, சாரம், காரம், துத்தம், தீமுருகல், பவளப்புற்று, அஞ்சனக்கல் முதலியவை நட்புச் சரக்குகள்.
சிங்கி, கௌரி, வெள்ளை, குதிரைப்பல், சத்திச்சாரம், வெடியுப்பு, இரும்பு, காந்தம், சூடன், பூரம், பொன்னம்பர், கற்சுவரு, நிமிளை, பூநீறு ஆகியவை பகைச் சரக்குககள் ஆகும்.
தற்போது நவீன முறைப்படி வாலை முறையில் ( Distillation ) பாதரசம் கிடைக்கிறது.
இயற்கையாகத் தாதுப் பொருளாகக் கிடைக்கும், இலிங்கத்திலிருந்து கிடைக்கும் இரசமே சுத்தி செய்த இரசத்திற்கு ஈடானது.